
பாரிஸ், ஆகஸ்ட்-12-போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தமது நீண்ட காலக் காதலியான Georgina Rodriguezவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Lisbonனுக்கு அருகே போர்ச்சுகல் கடற்கரை நகரான Cascaisசில் அத்திருமண விழா நடைபெற்றதாக போர்ச்சுகீசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தனிப்பட்ட முறையில் நடைபெற்ற அத்திருமண நிகழ்வில் அவர்களது ஐந்து பிள்ளைகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
41 வயதான ரொனால்டோ, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், தங்கள் கைகளில் திருமண மோதிரங்கள் அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “C (இதயம்) G” என்று தலைப்பிட்டிருந்தார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவு வெளியிடப்பட்ட 30 நிமிடங்களுக்குள்ளேயே 3 மில்லியனுக்கும் அதிகமான ‘லைக்’களைப் பெற்றது.
32 வயதான மாடல் அழகியும் இன்ஃப்ளூயன்சருமான Rodriguez, இன்ஸ்டாகிராமில் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்துச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
Madridடில் உள்ள Gucci கடையொன்றில் Rodriguez பணி புரிந்த போது அவர்கள் சந்தித்துக் கொண்டனர். அதிலிருந்து அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் போச்சுகல் சார்பில் பங்கேற்ற ரொனால்டோ, தமது நாட்டைப் பிரதிநிதித்துத் தாம் களமிறகும் இறுதி உலகக் கிண்ணம் அதுவென அறிவித்திருந்தார். அவர் தற்போது சவுதி கிளப்பான Al-Nass அணிக்காக விளையாடி வருகிறார்.
Manchester United, Real Madrid, Juventus ஆகிய அணிகளின் முன்னாள் வீரரான ரொனால்டோ, உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.



