Latestமலேசியா

மலாய்-முஸ்லிம்கள், பொது நிதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து; முகமட் சானிக்கு துணை சபாநாயகர் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட்.12-உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் Mohd Sany Hamzan வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மலாய் முஸ்லிம்கள் தவறானச் செயல்களில் ஈடுபட்டாலோ நிதி முறைகேடு செய்தாலோ அது ஒரு பிரச்சினையாகக் கருதப்படாது என அவர் கிண்டலாகக் கூறியது மக்களவை துணை சபாநாயகர் Datuk Ramli Mohd Norரைக் கோபப்படுத்தியது.

அக்கருத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் Mohd Sany அவையிலிருந்து வெளியேற்றப்படுவார் என அவர் கடுமையாகவும் எச்சரித்தார்.

தாபூங் ஹாஜி தொடர்பான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தில் கோம்பாக் MP Datuk Amirudin Shari பேசிக் கொண்டிருந்த போது Mohd Sany குறுக்கிட்டுப் பேசினார்.

பொது நிதியை முறைகேடாகக் கையாள்வது அல்லது அபகரிப்பது போன்ற செயல்களை மலாய்க்காரர்களும் முஸ்லிம்களும் செய்தால் மட்டுமே அது அனுமதிக்கத்தக்கது என்ற தமது கருத்தை Amirudin ஏற்கிறாரா என Sany வினவினார்.

பணத்தை எடுப்பவர் ஒரு மலாய்க்காரராக இருக்கும் பட்சத்தில் அவர் திருடினாலோ, கொள்ளையடித்தாலோ அல்லது நிதியை முறைகேடாகக் கையாண்டாலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. சீனர்களும் இந்தியர்களும் அதைச் செய்வதற்குத்தான் அனுமதியில்லை என Sany கூறினார்.

மலாய் முஸ்லிம்களை வெளிப்படையாகத் தாக்கும் வகையில் அக்கருத்து இருந்ததாக புத்ராஜெயா MP ஆட்சேபித்த நிலையில், அக்கருத்தை மீட்டுக் கொள்ளுமாறு Ramliயும் Sanyயிடம் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், பொது நிதியைச் சுரண்டிய ஒரு சில மலாய்-முஸ்லிம்கள் குறித்தே தாம் அவ்வாறு பேசியதாகக் கூறி Mohd Sany தமது வாதத்தில் உறுதியாக இருந்தார். அவர் தனது கருத்தை முழுமையாகத் திரும்பப் பெற மறுத்ததால் ஆத்திரமுற்ற Ramli, கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

ஒன்று அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் அவையை விட்டு வெளியேற உத்தரவிடப்படும் என்றார்.

இனங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினரை அவையை விட்டு வெளியேற உத்தரவிடுவதில் தமக்குத் தயக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமது கருத்தை மீட்டுக் கொள்ள Mohd Sany ஒப்புக் கொண்டதை அடுத்து Amirudinனின் விவாதம் தொடர்ந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!