Latestமலேசியா

வரும் டிசம்பரில் செயல்பாடுகளைத் தொடங்க ECRL-க்கு அந்தோணி லோக் சவால் விடுத்துள்ளார்

கோம்பாக், ஆகஸ்ட்.14-ECRL எனும் கிழக்குக்கரை ரயில் இணைப்புச் சேவையை நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட முன்கூட்டியே இவ்வாண்டு டிசம்பரில் தொடக்க போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சவால் விடுத்துள்ளார். அச்சேவையை அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்க இதற்கு முன் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் இவ்வாண்டு டிசம்பரில் தொடங்குமாறு MRL மற்றும் CCCC ஆகிய நிறுவனங்களுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

பல மலேசியர்கள் ஆண்டு இறுதியில் விடுமுறைக்குப் பயணம் செய்வர். அதோடு பள்ளி விடுமுறையும் இருக்கும். எனவே டிசம்பர் மாதம் பொருத்தமாக இருக்கும் என அந்தோணி லோக் கூறினார்.

அமைப்பு ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் இறுதி செயல்பாட்டு ஆய்வு ஆகியவை கிழக்குக்கரை ரயில் இணைப்பின் முக்கிய முன்னேற்பாடுகளாகும். தரை பொது போக்குவரத்து முகமையான APAD சுமூகப் பயணத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதனுடன் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ரயில்கள் விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டன. அனைத்தும் சீராக இருந்தால் சேவையை முன்கூட்டியே தொடங்கலாம் என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

குறைபாடு இல்லாத சோதனை ஓட்டம் பொதுவாக இரண்டு முதல் மூன்று மாதங்கள் பிடிக்கும். அக்காலக் கட்டத்தில், பயணிகள் இல்லாமல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே சேவையைத் தொடங்க முடியும் என்றாரவர். இதுவரை ஐந்து ரயில் தொகுப்புகள் மலேசியாவிற்கு வந்துள்ளன. மீதமுள்ளவை வரும் மாதங்களில் வந்து சேரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!