
மலாக்கா, ஆகஸ்ட்-16-பல்கலைக்கழக மாணவர்களிடையே வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மனிதவள அமைச்சு, PERKESO எனப்படும் சமூப் பாதுகாப்பு நிறுவனம் மூலமாக ‘MYFutureJobs தூதர்’ (Ambassador) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களை மேலும் கவரும் வகையில் ‘Oyen’ என்ற பூனை உருவம் அதிகாரப்பூர்வ மேஸ்கோட்டாகவும் (Mascot) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மலாக்கா, ஆயர் குரோவில் (Ayer Keroh) உள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான UTeMல் நடைபெற்ற ‘MYFutureJobs LINDUNG Kerjaya’ தொழில் நிகழ்வின் ஒரு பகுதியாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணண் ராமகிருஷ்ணன் இதனை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்று சுமார் 2,100 வேலைவாய்ப்புகளை வழங்கின.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) தற்போதைய காலக்கட்டத்தில் முதல் தேர்வாக உருவெடுத்து வருவதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களை நேரடியாக சக மாணவர்களிடம் கொண்டு சேர்க்க இந்த ‘MYFutureJobs தூதர்’ திட்டம் பெரிதும் உதவும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இரு மாணவர் தூதர்களும் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.வேலைவாய்ப்பு வழிகாட்டல் மற்றும் ‘MYFutureJobs Rovers’ சேவை மட்டுமின்றி, இளைஞர் கலந்துரையாடல் மற்றும் மின்-விளையாட்டு (E-Sports) போட்டிகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.



