
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17-பாஸ் கட்சியைச் சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் (PN) தேர்தல் இயக்குனர் Datuk Seri Muhammad Sanusi Md Nor வெளியிட்ட கருத்து குறித்து கெஆடிலான் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Muhamad Shahrul Adnan எதிர்வினையாற்றியுள்ளார்.
சிலாங்கூரில் Pakatan Harapanனைக் கவிழ்க்க Sanusi விரும்பினால் தாராளமாக முயலட்டும். ஜனநாயகத்தில் எல்லா கட்சிகளுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால், சிலாங்கூரைக் கைப்பற்றுவது குறித்து பெரிய முழக்கங்களை எழுப்பும் முன், பாஸ் சிலாங்கூர் மக்களுக்கு உண்மையில் என்ன வழங்க விரும்புகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
ஆட்சி செய்யத் தயாராக இருக்கிறோம் என பொதுமக்களை நம்ப வைக்க விரும்பினால், பாஸ் தெளிவான கொள்கைகள் மற்றும் திட்டமிடல் மூலம் அதன் தயார்நிலையைக் கொண்டிருப்பது முக்கியம். ஆட்சி நடத்துவது என்பது வெறும் பெரிய தேர்தல் இயந்திரத்தைக் கொண்டிருப்பதோ அல்லது அரசியல் பேரணிகளில் மேடைகளை நிரப்புவதோ அல்ல. மாநில வருவாய், மேம்பாடு, முதலீடு, வீட்டுவசதி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் மக்களின் நலன் ஆகியவற்றை நிர்வகிக்கும் திறன் ஆட்சிக்குத் தேவை என்பதை Muhamad Shahrul சுட்டிக் காட்டினார்.
மலேசியப் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாகச் சிலாங்கூர் தொடர்ந்து திகழ்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ‘இரண்டாவது சிலாங்கூர் திட்டம்’ அண்மையில்தான் சமர்ப்பிக்கப்பட்டது. சிலாங்கூர் அரசு மாநில வளர்ச்சியை முன்னிறுத்தி செயல்பட்டு வரும் வேளையில், யாரை வீழ்த்துவது என்பது பற்றி மட்டுமே பேசிவிட்டு பாஸ் கட்சி மாநிலத்திற்குள் வருவது பல வித்தியாசங்களை எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
Sanusiயின் அறிவிப்புகளால் சிலாங்கூர் இளைஞர் பிரிவு சற்றும் கலங்கவில்லை. அதே வேளை, சிலாங்கூரைத் தங்கள் அரசியல் இலக்காக மாற்ற பாஸ் உண்மையாகவே விரும்பினால், சிலாங்கூரில் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என Muhamad Shahrul கூறினார். பக்காத்தான் ஹராப்பானைக் கவிழ்ப்பதற்கான ‘தொடக்கப் புள்ளியாக’ சிலாங்கூரைப் பயன்படுத்தி, அந்த உத்வேகத்தை மத்திய அரசு அளவிற்குக் கொண்டு செல்ல விரும்புவதாக முன்னதாக Sanusi கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



