Latestமலேசியா

மெனாரா FINAS டாமன்சாரா திறப்பு; திரைப்படத் துறை, படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கு புதிய வலு

கோலாலம்பூர் — மலேசியாவின் திரைப்படம், ஒளி-ஒலி மற்றும் படைப்பாற்றல் துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், டாமன்சாராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மெனாரா FINAS இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ’ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில், FINAS தலைவர் டத்தோ டாக்டர் ஹான்ஸ் ஐசக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், நாட்டின் திரைப்படம் மற்றும் ஒளி-ஒலி துறையின் வளர்ச்சியில் FINAS ஆற்றிவரும் முக்கிய பங்களிப்பைப் பாராட்டினார்.

அதேவேளை, வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உள்ளடக்கச் சூழலுக்கு ஏற்ப மலேசிய திரைப்படத் துறை தொடர்ந்து வளர்ச்சியடைவதுடன், அதன் போட்டித்திறனையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ’ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில், நாட்டின் திரைப்படம் மற்றும் ஒளி-ஒலி துறையை முன்னெடுத்துச் செல்வதில் FINAS முக்கிய பங்கு வகித்து வருவதாகத் தெரிவித்தார்.

டிஜிட்டல் உள்ளடக்கத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மலேசிய திரைப்படத் துறையை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்நாட்டு படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திறப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மெனாரா FINAS டாமன்சாராவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக FINAS தலைவர் டத்தோ டாக்டர் ஹான்ஸ் ஐசக் மற்றும் FINAS தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அஸ்மிர் சைஃபுடின் முஹ்தாலிப் தெரிவித்தனர்.

மெனாரா FINAS டாமன்சாராவின் திறப்பு, மலேசியாவின் திரைப்படம் மற்றும் ஒளி-ஒலி துறையின் வளர்ச்சியில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.

நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதுடன், உள்ளூர் படைப்பாளிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தி, மலேசிய திரைப்படத் துறையை உலக அரங்கில் உயர்த்துவதற்கும் இந்தப் புதிய தலைமையகம் முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!