
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,நாடு முழுவதும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 99 பேர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 119 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை 10 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட Op Gali Mega நடவடிக்கையில், சோதனையிடப்பட்ட 45 இடங்களில் 24 சட்டவிரோத சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
கைதுச் செய்யப்பட்டவர்களில் 61 பேர் மலேசியர்கள், மற்றவர்கள் வெளிநாட்டவர்கள். அவர்கள் 18 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்த நடவடிக்கையில் சுமார் 38.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 87 கனரக இயந்திரங்கள், 14 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 55 வாகனங்கள் மற்றும் பல்வேறு சுரங்க உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், நிலக்கரி, மணல், கல் மற்றும் மண் உள்ளிட்ட சுமார் 33 ஆயிரம் டன் இயற்கை வளங்களும் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மதிப்பு சுமார் 21 மில்லியன் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 32 நபர்கள் மற்றும் 21 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைக்காக அவர்களின் விவரங்கள் உள்நாட்டு வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.



