
தன்னம்பிக்கையே மூலதனம் என்ற மந்திர வார்த்தையின் உந்துதலோடு 7 நாட்களில் 12 மலைகள் என்ற குறிக்கோளை நோக்கி முன்னேறி வருகிறார் நாட்டின் மலையேற்ற வீரர் லோகசந்திரன். இவரது அச்சாதனைப் பயணம் இன்று நான்காவது நாளாகத் தொடர்கிறது.
நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜோகூரில் தொடங்கிய லோகசந்திரனின் லட்சியப் பயணம், நெகிரி செம்பிலான், சிலாங்கூரைக் கடந்து தற்போது பஹாங் நோக்கிச் சென்றுள்ளது.
இதனிடையே, நேற்று நண்பகல் 12 மணிக்கு சிலாங்கூர், Gunung Hitam மலை ஏறிய லோகசந்திரன் பல சவால்களையும் தடைகளையும் தாண்டி சுமார் 13 மணி நேரங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பாக மீண்டும் மலையடிவாரத்தை அடைந்தார்.
அங்கு வலிக்கு ஊசிப் போட்டுக் கொண்டு மருத்துவ சிகிச்சைப் பெற்ற பின் இவர் சிறிதும் தளராது அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தார் லோகசந்திரன்.
அவ்வகையில் Gunung Brinchang Baratட்டில் இன்று காலை 10.38க்குத் தொடங்கிய லோகசந்திரனின் பயணம் பிற்பகல் 1.13 மணிக்கு மலை உச்சியைத் தொட்டது. உடல் வலி, தசை பிடிப்பு, களைப்பு, சோர்வு என அனைத்தையும் பின் தள்ளி இலட்சியத்தில் தீவிரமாக இருக்கும் இவர் இன்று மாலை பஹாங், Tanah Rataவில் உள்ள Gunung Jasar மலை ஏறுகிறார். அடுத்து Gunung Siku என இவரது பயணம் நீள்கிறது.
இவ்வேளையில் தமது இச்சாதனைப் பயணம் நெடுகிலும் தம்முடன் பயணிப்பவர்களுக்கும், உடன் இருப்பவர்களுக்கும், ஆதரவு கொடுத்து ஊக்குவித்து வருபவர்களுக்கும், சவாலை இனிதே முடிக்க பிரார்த்தனை செய்து கொள்பவர்களுக்கும் லோகசந்திரன் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இவரது அந்த இலட்சிய, சாதனைப் பயணம் குறித்த அடுத்தடுத்த தகவல்களைத் தெரிந்து கொள்ள வணக்கம் மலேசியாவுடன் இணைந்திருங்கள்.



