Latestமலேசியா

Temenggor மற்றும் Bersia அணைகள் பாதுகாப்பாக இருக்கின்றன: நிலநடுக்க அதிர்வுகளால் பாதிக்கப்படவில்லை

ஈப்போ, ஆகஸ்ட்-28-பேராக், Hulu Perak மாவட்டத்தின் Gerikகில் உள்ள இரண்டு முக்கிய அணைகளான Temenggorரும் Bersiaவும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. நேற்று நள்ளிரவு Gerik, Temenggorரில் ஏற்பட்ட 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கத்தால் அவை பாதிக்கப்படவில்லை.

பேராக் ஆற்றின் மின் உற்பத்தி நிலையத்தை (SSJ) நிர்வகிக்கும் TNB வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுத் தலைவர் Datuk Seri Mohammad Nizar Jamaluddin தெரிவித்தார்.

Temenggor மற்றும் Bersia அணைகளில் பணியாற்றும் SSJ ஊழியர்கள் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தனர். அதே வேளை அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அனைத்து மின் உற்பத்திப் பிரிவுகளும் நல்ல நிலையில் உள்ளன. அதிர்வால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அவை வழக்கம்போல் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். நிலநடுக்கத்தின் அதிர்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் பொதுமக்கள் வெளிப்படுத்திய கவலைகள் குறித்து அவர் அவ்விளக்கத்தை அளித்தார்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த லேசான நிலநடுக்கம் அதிகாலை 12.06 மணிக்கு ஏற்பட்டது. அது Hulu Perakக்கின் வடகிழக்கே 9 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்தது.

இவ்வேளையில், Temenggor பகுதியில் ஏற்படக்கூடிய நிலநடுக்கங்களின் அளவு குறைவாகவே இருக்கும் என மாநில அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பக் குழுத் தலைவர் Teh Kok Lim தெரிவித்துள்ளார்.

செயற்கைக்கோள் படங்கள், லேண்ட்சாட் தரவுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் அது கண்டறியப்பட்டது. குறிப்பாக Gerikக்கில் Temenggor, Manjung மாவட்டங்களை மையமாகக் கொண்டு அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!