
பத்து பஹாட், ஆகஸ்ட் 28 – பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மனைவியை தாக்கி காயப்படுத்திய 41 வயதுடைய ஆடவனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று செங்கராங் பகுதியிலுள்ள வீட்டில், 37 வயதான தனது மனைவியின் தலையில் தாக்கி, சுவரில் தள்ளியதாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தனது அனுமதியில்லாமல் தன்னுடைய மனைவி வெளியே சென்றதால் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது.
தாக்குதலில் மனைவியின் தலையில் வீக்கம் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால் அப்பெண்மணி போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணைக்குப் பின்னர், ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் சந்தேக நபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது.



