Latestஉலகம்

வெள்ள மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவிகளை நிராகரித்தது நேப்பாளம்

கட்மாண்டு, ஆகஸ்ட்-28–நேப்பாளத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, காணாமல் போனவர்களைத் தேடி, மீட்கும் பணிகளுக்காக பல்வேறு நாடுகள் உதவ முன் வந்துள்ள நிலையில், அந்த உதவிகளை அந்நாடு ஏற்க மறுத்துள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் தங்களின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்ப அனுமதிக்குமாறு நேப்பாள அரசிடம் கோரியுள்ளன. ஆயினும் அதனை நிராகரித்த நேப்பாளம், தங்களது பாதுகாப்பு அமைப்புகளே தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு எங்களுக்கு அத்தகைய உதவி எதுவும் தேவையில்லை. அதோடு வெளிநாட்டு மீட்புக் குழுக்களை ஏற்கும் திட்டமும் இல்லை என நேப்பாளம் தெரிவித்துள்ளதாக தென் கொரியாவும் கூறியுள்ளது. இருப்பினும், நேப்பாளத்துடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக அது குறிப்பிட்டது.

அதோடு, சர்வதேச அமைப்புகள் மூலம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க தென் கொரியா உறுதியளித்துள்ளது. நேப்பாள வெள்ளத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த ஒன்பது பேர் காணாமல் போயிருக்கும் நிலையில், மேலும் 10 பேர் சிக்கியுள்ளனர்.

அப்பெரு வெள்ளத்தில் சுமார் 500 பேர் உயிரிழந்ததுடன், குடியிருப்புகள் மற்றும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன. சீன எல்லையை ஒட்டியுள்ள ராசுவா (Rasuwa) மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயிருக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராசுவா மாவட்டம் சீனாவின் திபெத் பகுதியுடன் எல்லையைப் பகிர்வதால், சில முக்கியக் காரணங்களுக்காகவே வெளிநாட்டு மீட்புக் குழுக்களை நேப்பாளம் ஏற்கத் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கும் சீனாவுடனான குறிப்பிட்ட விவகாரங்களுக்கும் தொடர்பில்லை என நேப்பாளம் தெளிவுபடுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!