அன்பின் சுமை தாங்கி: பத்துமலை படிகளில் ஆண்டுதோறும் சகோதரனால் சுமந்து செல்லப்பட்ட குணசீலன் 42 வயதில் காலமானார்

சிங்கப்பூர், ஆகஸ்ட்-31,ஒவ்வோர் ஆண்டும் நமது பத்துமலை திருத்தலத்தின் 272 படிகளை ஏறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.ஆனால், சிங்கப்பூரைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு…அந்தப் படிகள் பக்தி மட்டுமல்ல, எல்லையற்ற அன்பின் அடையாளம்.
இந்நிலையில் அவர்களில் ஒருவரான Cerebral Palsy எனப்படும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 42 வயதான குணசீலன், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலமானார்.
அவரது ஒரே பராமரிப்பாளரான மூத்த சகோதரர் சுரேஷ், தைப்பூசத் திருநாளின் போது குணசீலனைத் தனது முதுகில் சுமந்துகொண்டு அந்த செங்குத்தான படிகளை ஏறிய காட்சிகள் பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்தவை.
தனது அன்புச் சகோதரனின் எதிர்பாராத மறைவு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சுரேஷ், “மிகக் கனத்த இதயத்தோடு இதைப் பகிர்கிறேன்… என் அன்புச் சகோதரன் அமைதியாக உலகை விட்டுப் பிரிந்துவிட்டான். என் இதயத்தில் அவனுக்கு என்றுமே தனி இடம் உண்டு” என வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
“என் தம்பியைப் பராமரிப்பதும், அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருவதும் எனக்குக் கிடைத்த பாக்கியம்… அதுவே என் ஆன்மீக வழிபாடு” என சுரேஷ் அடிக்கடி கூறுவார்.
சமூகத்தின் பார்வைகளையும் தடைகளையும் தாண்டி, தன் தம்பிக்கு எல்லா சந்தோஷங்களையும் தர அவர் ஓயாது உழைத்தார்.
“இவரல்லவா அண்ணன்!” என ஊரார் மெச்சும் அளவுக்கு தனது தம்பியைப் பராமரித்தவர் சுரேஷ்.இன்று குணசீலன் நம்மிடையே இல்லை…
ஆனால், அவர் மீது சுரேஷ் காட்டிய அந்தச் சகோதர பாசம், உலகிற்கு அன்பின் உண்மையான அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்துச் சென்றுள்ளது.அன்பிற்கு என்றுமே முடிவில்லை…குணசீலனின் ஆன்மா சாந்தியடையட்டும்.



