
தஞ்சோங் பூஙா, செப்டம்பர்-2-பினாங்கு, தஞ்சோங் பூஙாவில் வீடற்ற நாயைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, வளர்ப்பு நாய் ஒன்றின் உரிமத்தை பினாங்குத் தீவு மாநகர மன்றம் (MBPP) இரத்துச் செய்துள்ளது.
ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில், Pit Bull எனக் கூறப்படும் பெரிய அளவிலான வளர்ப்பு நாய் ஒன்று ‘டிம்’ என்ற வீடற்ற நாயைக் கடித்துத் தாக்கியது சமூக வலைத் தளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, அந்த நாயைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் உரிமத்தை இரத்துச் செய்துள்ளனர்.
மேலும், நாய் கடித்ததற்காக உரிமையாளருக்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
சம்பவம் நடந்தபோது நாயை அழைத்துச் சென்றது தாம் இல்லை என அதன் பதிவுச் செய்யப்பட்ட உரிமையாளர் கூறியுள்ள நிலையில், அது குறித்து போலீஸ் புகார் செய்யுமாறு மாநகர மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரம் தேவைப்படும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட நாய் தொடர்ந்து MBPP பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது.



