Latestமலேசியா

பள்ளியின் முன் நிகழ்ந்த ஆயுதமேந்திய மோதல்:’கேங் 04′ (Gang 04) கும்பல் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய காவல் துறை

ஜார்ஜ்டவுன், செப்-02-பினாங்கு, ஆயர் ஈத்தாமில் தேசிய வகை சீனப் பள்ளியொன்றின் முன் நிகழ்ந்த மோதலுக்கு கடன் தொடர்பில் ஏற்பட்ட தவறான புரிதலே காரணம் என நம்பப்படுகிறது. அம்மோதலில் “கேங் 04” (Gang 04) என்ற பெயரைப் பயன்படுத்திய கும்பல் ஈடுபட்டதாக காவல் துறை தெரிவித்தது.

அச்சம்பவத்திற்கும் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக வட்டிக்குக் கடன் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்குக் கடன் தொகையை வசூலித்துத் தர அந்தக் கும்பல் முயன்ற போது பேச்சு வார்த்தையில் தொடங்கி ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இறுதியில் மோதலில் முடிந்ததாக அவர் விளக்கினார்.

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி நிகழ்ந்த அந்த ஆயுதமேந்திய மோதலைத் தொடர்ந்து, மூன்று பதின்ம வயதினர் உட்பட 13 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் பினாங்கு மாநிலக் காவல் துறைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் உள்ள சமூக விரோதச் செயல்கள், சூதாட்டம் மற்றும் ரகசியக் கும்பல்கள் தடுப்புப் பிரிவு (D7), வடகிழக்கு மாவட்டக் காவல் துறைத் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, மத்திய காவல் நிலையம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஐந்து சோதனைகளில் 16 முதல் 33 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனிடையே, அச்சம்பவத்தில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த இருவருக்கும் மோதலில் ஈடுபட்ட கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் டென்னிஸ் குறிப்பிட்டார். மாறாக சம்பந்தப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தவறாகக் கருதப்பட்டே அவர்கள் குறி வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் கூறினார்.

பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது. ஆயுதத்தைப் பயன்படுத்தி கடும் காயத்தை ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326-ன் கீழும், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதற்காகப் பிரிவு 148-ன் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!