Latestமலேசியா

மலாக்கா Kampung Morten தொலைந்து போன கைப்பேசி: மீட்டுத் தந்து 200 ரிங்கிட் ‘காபி பணம்’ கேட்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பெண்

மலாக்கா, செப்.03-மலாக்கா ஆற்றுப் பகுதியில் காணாமல் போன கைத்தொலைபேசியை மீட்டுத் தர உதவிய நபர் ஒருவர், அதற்காக 200 ரிங்கிட் ‘காபி பணம்’ கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கம்போங் மோர்டன் இளைஞர் அமைப்பு (Kampung Morten Youth Group) மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்விவகாரத்தைத் தாங்கள் தீவிரமான ஒன்றாகக் கருதுவதாகவும் அதனால் ஏற்பட்ட அதிருப்தி, கவலை மற்றும் அசௌகரியத்தை புரிந்து கொள்வதாகவும் கம்போங் மோர்டன் இளைஞர் அமைப்பின் தலைவர் Ahmad Safwan Salam தெரிவித்தார்.

அதன் தொடர்பில் நேற்று மாலை 6.56 மணியளவில் Melaka Tengah காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விட்டது. அதோடு விசாரணைக்கு தேவையான முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

கம்போங் மோர்டன் கிராமத்துக்கு வருவோரின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் Ahmad Safwan குறிப்பிட்டார்.

இதனிடையே, சமூக வலைதளங்களில் வைரலான அச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் இதுவரை காவல்துறையில் புகார் ஏதும் கொடுக்கவில்லை என Melaka Tengah மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Halim Abas தெரிவித்தார்.

மலாக்கா ஆற்றங்கரையில் தமது தாயாருடன் அமர்ந்திருந்த போது தாம் கைப்பேசியைத் தொலைத்ததாக பெண் ஒருவர் கூறியிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் யாரோ கைப்பேசியை எடுத்துச் சென்றதாகவும், தமது நண்பர் அவரைத் துரத்திச் செல்வதாகவும் கூறியதாகத் அப்பெண் தெரிவித்திருந்தார்.

பின்னர் அந்நபர் தம்மை வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று கைப்பேசியை மீண்டும் ஒப்படைத்ததுடன், 200 ரிங்கிட் ‘காபி பணம்’ கேட்டதாகவும் அப்பெண் அதிருப்தியுடன் குற்றம் சாட்டியிருந்தார்.

அப்பதிவு வைரலான நிலையில், அதே நபரால் தாங்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறி மேலும் சில சமூக வலைதளப் பயனர்களும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!