
கோலாலம்பூர், செப்.03-பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் மசோதாவும், தேசிய சட்டத்துறைத் தலைவர் (AG) மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிக்கும் மசோதாவும் தயாராகி விட்டதாக சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Datuk Seri Azalina Othman Said தெரிவித்திருக்கிறார்.
அவ்விரு மசோதாக்களும் எந்த நேரத்திலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என அவர் கூறினார்.
எனினும், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அம்மசோதாக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படுமா என்பது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முடிவைப் பொறுத்தது. இரு மசோதாக்களும் கூட்டரசு அரசியலமைப்புத் திருத்தங்களை உள்ளடக்கியவை என்பதால், அவை நிறைவேற மக்களவை உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவு தேவை என Azalina விளக்கினார்.
AG மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவிகளைப் பிரிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும். பதவிகள் பிரிக்கப்படுவது அரசுத் தரப்பு வழக்குத் தொடரும் முறையின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுடன், அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் தொடரப்படுகின்றன என்ற பொதுமக்களின் சந்தேகத்தையும் குறைக்க உதவும் என Azalina தெரிவித்தார்.
அதோடு, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நாடாளுமன்ற நடைமுறையின் மூலம் நியமிக்கப்படுவது பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். இரு பதவிகளையும் பிரிப்பதன் மூலம் அவற்றின் பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வழக்குத் தொடரும் பணியும் வலுப்பெறும். அம்மசோதா சிறப்புத் தேர்வுக் குழுவின் மேலதிக பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாக மட்டுப்படுத்தும் திட்டம், அரசியலமைப்பின் கீழ் பொறுப்புக்கூறல், அதிகாரச் சமநிலை மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என Azalina தெளிவுபடுத்தினார்.
அம்மசோதா இதற்கு முன் மக்களவையில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது. அப்போது 146 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. 32 பேர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.



