Latestஉலகம்மலேசியா

நேபாள பேரிடர் உலகிற்கான எச்சரிக்கை – மலேசியா முன்கூட்டியே விழித்துக்கொள்ள வேண்டும்: டாக்டர் தி.நோவலன்

கோலாலம்பூர்: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர், காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் எதிர்கொள்ளும் அபாயத்தின் தீவிரத்தை உணர்த்தும் மற்றுமொரு எச்சரிக்கையாகும்.

இதனை ஒரு தொலைதூர நாட்டில் நிகழ்ந்த துயரமாக மட்டும் பார்க்காமல், மலேசியா தனது பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் தி. நோவலன் தெரிவித்தார்.

மஇகா தேசிய சுகாதாரப் பிரிவுத் தலைவருமான அவர், அண்மைக்காலமாக உலகின் பல பகுதிகளில் கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள், கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு, வெப்ப அலை மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சவால்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகக் கூறினார்.

“இன்று நேபாளத்தில் நாம் காணும் பேரிடர் நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி. காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து எந்த நாடும் முழுமையாகத் தப்ப முடியாது. பேரிடர் நமது வாசலைத் தட்டும் வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே நாம் தயாராக வேண்டும்,” என்றார் அவர்.

புவி வெப்பமடைதல் வெறும் வெப்பநிலை உயர்வு அல்ல

புவி வெப்பமடைதல் என்பது பூமியின் சராசரி வெப்பநிலை நீண்டகால அடிப்படையில் அதிகரிப்பதாகும். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு, தொழிற்சாலை மற்றும் வாகனப் புகை வெளியேற்றம், காடழிப்பு போன்ற மனித நடவடிக்கைகள் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

“புவி வெப்பமடைதல் என்பது வெப்பநிலை உயர்வை மட்டும் குறிக்கவில்லை. மழைப்பொழிவு முறைகளில் மாற்றம், தீவிர வெப்ப அலை, வறட்சி, கனமழை, வெள்ள அபாயம், பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் கடல் மட்டம் உயருதல் போன்ற பல்வேறு விளைவுகளையும் அது ஏற்படுத்துகிறது,” என்று டாக்டர் நோவலன் விளக்கினார்.

மலேசியா இப்போதே தயாராக வேண்டும்

மலேசியா வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயக் கண்காணிப்பு, துல்லியமான வானிலை முன்னறிவிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், அவசரகால வெளியேற்றத் திட்டங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“பேரிடர் நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. சரியான நேரத்தில் வழங்கப்படும் ஓர் எச்சரிக்கை பல உயிர்களைக் காப்பாற்றக்கூடும்.

பேரிடர் தயார்நிலை அரசாங்க அமைப்புகளுடன் மட்டும் நின்றுவிடாமல், அடிமட்ட மக்களையும் சென்றடைய வேண்டும்,” என்றார் அவர்.

காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது பொதுச் சுகாதாரத்திற்கும் நேரடியான அச்சுறுத்தலாக மாறிவருகிறது என்று டாக்டர் நோவலன் சுட்டிக்காட்டினார்.

இயற்கைப் பேரிடர்கள் உயிரிழப்பு, காயங்கள், மக்கள் இடம்பெயர்வு, சுகாதாரச் சேவைகளில் பாதிப்பு, தொற்றுநோய் அபாயம், மனநலப் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான குடிநீர், உணவு கிடைப்பதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.

அதேவேளையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்து நடுதல், கழிவுகளைக் குறைத்தல், மறுசுழற்சியை ஊக்குவித்தல் மற்றும் இளம் தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.

“காலநிலை மாற்றத்திற்கு எல்லைகள் கிடையாது. பிற நாடுகளில் நிகழும் பேரிடர்களைப் பார்த்து அனுதாபப்படுவதோடு மட்டும் மலேசியா நின்றுவிடக் கூடாது. அவற்றிலிருந்து பாடம் கற்று, நமது நாட்டின் தயார்நிலையை இப்போதே வலுப்படுத்த வேண்டும்.”

“இன்று நாம் எடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாளை ஓர் உயிரையாவது காப்பாற்றுமானால், அதுவே மிகப்பெரிய வெற்றி. பேரிடருக்குப் பிறகு வருந்துவதைவிட, பேரிடருக்கு முன்பே செயல்படுவோம்,” என்று டாக்டர் நோவலன் வலியுறுத்தினார்.”

நேபாள பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விரைவில் மீண்டு வரவும் பிரார்த்தனை தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!