Latestஉலகம்மலேசியா

மலேசியா–இந்தோனேசியா இளைஞர் உறவுக்கு புதிய பாலம்; மெடானில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மலேசிய இந்திய இளைஞர் மன்றம்

மலேசிய இந்திய இளைஞர் மன்றம் சர்வதேச அளவிலான இளைஞர் உறவுகளையும் ஒத்துழைப்பு வலையமைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தோனேசியாவின் மெடான் நகரில் செப்டம்பர் 3 முதல் 6ஆம் திகதி வரை நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டது.

மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் தலைவர் தனேஷ் பாசில் தலைமையில் நடைபெற்ற இப்பணிப்பயணத்தில், தலைமைத்துவ உறுப்பினர்களும் செயலகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினரும் பங்கேற்றனர்.

இதில் திரு சஞ்ஜேய் சங்கரன், சந்தியா சாமிவேலு, ஜனார்த்தனன் வேலாயுதம், குலேந்திரன் அமிர்தலிங்கம், கனகவள்ளி கோபி, கிருஷ்ணா தோகைநாதன், தஷிதரன் தர்மர், ஹெகாபிஷேக் குமார், நித்தியராஜா நடராஜா, மகாஸ்வேதா சண்முகராஜன், துர்காஷினி கணேசன், ஹேமநாத் சியாமளரூபன், பவேதரன் இளங்கோவன், திவேயரூபன் ராமூ, பெஷ்மிந்தர் சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இப்பணிப்பயணத்தின் போது இளைஞர் அமைப்புகள், உள்ளாட்சி அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றுடன் பல்வேறு சந்திப்புகள் நடத்தப்பட்டன. இச்சந்திப்புகள் தலைமைத்துவம், கல்வி, பண்பாடு, சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்வதில் முக்கியத்துவம் பெற்றன.

பணிப்பயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக, இந்தோனேசியா–இந்திய இளைஞர் மன்ற (IIYF) ஏற்பாட்டில் நடைபெற்ற “Youth Leadership & Cultural Exchange” நிகழ்ச்சி நடைபெற்றது.

மலேசியா, இந்தோனேசியா, இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் தலைவர்களுக்கு இடையே அனுபவங்களையும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் களமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்ததுடன், மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம், IIYF இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) கையெழுத்தானது.

மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் தனேஷ் பாசிலும், IIYF தலைவர் ரவீந்திராவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இளைஞர் பரிமாற்றம், தலைமைத்துவ மேம்பாடு, கல்வி, பண்பாடு, சர்வதேச இளைஞர் வலையமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இரு அமைப்புகளும் இணைந்து செயல்படுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்தியர் இளைஞரணியினர் “மெடான்” நகர மேயர் அலுவலகத்திற்கும் மரியாதை நிமித்தமாக வருகையை மேற்கொண்டனர். அங்கு “மெடான்” நகர நிர்வாகத்தின் ஆட்சி, சட்டம், அரசியல் விவகாரங்களுக்கான பிரதிநிதி “ரக்மத் அடிஸ்யா புத்ரா” இக்குழுவினரை வரவேற்றார்.

இச்சந்திப்பில், பல்வேறு இன, சமயங்கள் உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை நிர்வகிப்பதில் “மெடான்” நகரம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறைகள் குறித்தும், நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இந்தோனேசிய தேசிய இளைஞர் குழு (KNPI) வடக்கு சுமாத்திரா அமைப்பின் நிர்வாகிகளுடனும் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.

“KNPI” வடக்கு சுமாத்திரா மாநிலத் தலைவர் “அல்டி சியாஹ்புத்ரா சிரேகர்” தலைமையிலான குழுவினருடன் நடைபெற்ற இச்சந்திப்பு, மலேசியா–இந்தோனேசியா இளைஞர்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக அமைந்தது.

இளைஞர் மேம்பாடு, தலைமைத்துவப் பயிற்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பாக இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மலேசிய இந்தியர் இளைஞரணியினர் சுமத்திரா பல்கலைக்கழகத்திற்கும் (USU) வருகை தந்து, பல்கலைக்கழகத்தின் சர்வதேச, ஒத்துழைப்புப் பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ரொண்டாங் அவர்களும் “USU” மாணவர் நிர்வாகத்தின் தலைவரான அங்கா அல் மாறிஸ் ஆகியோருடன் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் இளைஞர் தலைமைத்துவம், கல்வி, சர்வதேச வலையமைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்துகள் பரிமாறப்பட்டன.

இதனிடையே, மலேசிய இந்தியர் இளைஞர் மன்றப் பிரதிநிதிகள் டெலி செர்டாங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கும் வருகை தந்தனர்.

அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 மீட்டர் உயரமுடைய ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையையும் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

மேலும், செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் MIYC சார்பில் ஆலயத்திற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

நான்கு நாள் பணிப்பயணத்தின் மூலம் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்திற்குப் பல்வேறு முக்கிய முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, IIYF உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளின் இளைஞர்களுக்கு இடையிலான எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.

மெடான் நகரின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பு, அங்குள்ள இளைஞர் மேம்பாட்டுச் செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இக்குழுவினருக்குக் கிடைத்தது.

இவ்வனுபவங்கள் மலேசியாவில் இளைஞர் மேம்பாட்டையும் சமூகப் பங்கேற்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கான வருகையும் உடன் வழங்கப்பட்ட ஆதரவும் பிராந்திய அளவில் சமூக உறவுகளையும் பண்பாட்டுப் பாரம்பரியப் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதில் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

மலேசிய இந்திய இளைஞர் மன்றத் தேசியத் தலைவர் திரு தனேஷ் பாசில் கூறுகையில், இந்தப் பணிப் பயணம் மலேசியா, இந்தோனேசியா இளைஞர்களுக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் நல்லதொரு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தளமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே மேலும் பல இளைஞர் பரிமாற்றத் திட்டங்கள், கல்வி ஒத்துழைப்புகள், தலைமைத்துவப் பகிர்வுகள், சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய முயற்சிகள் மூலம் நாடுகளுக்கும் சமூகங்களுக்கும் இடையே பாலமாக இளைஞர்களை உருவாக்குவதுடன், தலைமைத்துவத் திறன், தொலைநோக்குப் பார்வை, சர்வதேச சிந்தனை கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கும் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் இலக்குக்கும் வலுசேர்க்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!