
புதுடெல்லி, செப்டம்பர் 9 -கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் புதுடெல்லி சென்ற மலேசியப் பெண் ஒருவர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 15.015 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி விமான நிலையத்தின் முனையம் 3-க்கு வந்த அந்தப் பெண், பயணிகள் சுயவிவரப் பரிசோதனையில் சந்தேகத்துக்குரியவராக அடையாளம் காணப்பட்டார். பச்சை வழித்தடத்தில் சென்ற அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது டிராலி பையில் 30 பொட்டலங்களில் கஞ்சா இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பொருளின் எடை 15,015.5 கிராம் என்றும், அதன் சந்தை மதிப்பு 52.5 மில்லியன் இந்திய ரூபாய் என்றும் டெல்லி சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
பெண் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவின் போதைப்பொருள் மற்றும் மனநலப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கஞ்சாவை யார் வழங்கியது, இந்தியாவில் யாரிடம் ஒப்படைக்க இருந்தார், அதற்காக அவருக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெண்ணின் பெயர் மற்றும் வயது உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.



