
கோலாலம்பூர், செப்டம்பர்-13-அம்னோ பொதுப் பேரவையின் நிறைவு நாளில் உரையாற்றிய அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, ஒற்றுமை அரசாங்கத்திற்கு இரு முக்கியத் தேர்வுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உடனடியாக 16-ஆவது பொதுத் தேர்தலை நடத்துவது அல்லது பாரிசான் நேஷனல் கூட்டணியை ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றுவது ஆகியவையே அந்த இரு தேர்வுகளாகும்.
துணிச்சல் இருந்தால் உடனடியாக முடிவெடுத்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருமாறும், துணைப் பிரதமருமான சாஹிட் சவால் விடுத்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
BN கூட்டணி வெளியேறினால், தற்போதைய அரசாங்கத்திற்கான அடிப்படை 112 நாடாளுமன்ற இடங்களின் ஆதரவு இல்லாமல் போய்விடும் என்பதால், மக்களுக்கு புதிய தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் நிலைத்தன்மையை உறுதிச் செய்யவே 2022-ல் அப்போதைய மாமன்னரின் கட்டளைக்கு இணங்க BN இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை தனது அரசியல் குரு எனக் கூறி வந்த சாஹிட், இந்த அம்னோ மாநாட்டில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அவரைத் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்வார் இந்தியாவிலிருந்து திரும்பியதும், நாடாளுமன்றத்தைக் கலைக்க சாஹிட்டும் அம்னோவும் கடும் அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



