
ஜித்ரா, செப்டம்பர் 16 – சிமென்ட் ஏற்றிச் சென்ற 43 வயது லாரி ஓட்டுநர் ஒருவர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, ஜித்ரா சுங்கச்சாவடியில் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையமான AADK நடத்திய சிறுநீர் பரிசோதனையில் இது கண்டறியப்பட்டது.
பெர்லிஸிலிருந்து பேராக்கிற்கு சிமென்ட் ஏற்றிச் சென்றபோது தூக்கத்தைத் தவிர்க்கவும், நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்கவும் போதைப்பொருள் உட்கொண்டதாக பெண்டாங்கைச் சேர்ந்த அந்த ஓட்டுநர் தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாக லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
ஜூலை முதல் இதுவரை ஆறு லாரி மற்றும் விரைவுப் பேருந்து ஓட்டுநர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக JPJ கெடா இயக்குநர் ஸ்டியன் வான் லுட்டாம் (Stien Van Lutam) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் மேல் விசாரணைக்காக AADK-யிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணை முடியும் வரை அவரது CDL மற்றும் தொழில்முறை ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.



