Latest

ஈப்போவில் சாலைத் தடுப்பை மீறி போக்குவரத்துப் போலீஸ்காரரை மோதி தப்பியோட்டம்; உரிமமில்லா 29 வயது ஓட்டுநர் கைது

ஈப்போ, செப். 24-ஈப்போ ஜாலான் சிலிபினில் சாலைத் தடுப்பில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரரை கார் மோதி காயப்படுத்திய சம்பவத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை சுமார் 9.45 மணியளவில், ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போக்குவரத்து போலீஸார் ஜாலான் சிலிபினில் சாலைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்துமாறு போலீஸார் உத்தரவிட்டபோதும், அதன் ஓட்டுநர் உத்தரவை மீறி வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து மூன்று போக்குவரத்து போலீஸார் அந்த காரை பின்தொடர்ந்த நிலையில், பேராக் மாநிலச் செயலகக் கட்டிடம் அருகிலுள்ள போக்குவரத்து விளக்குப் பகுதியில், காரை இடதுபுறப் பாதையில் செலுத்திய ஓட்டுநர் திடீரென திருப்பம்பியபோது போலீஸ்காரர் ஒருவரை மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து தப்பியோடிய ஓட்டுநர், குனோங் லாங் நோக்கிச் சென்றதுடன், குனோங் லாங் அருகே எதிர்திசையில் வாகனத்தை செலுத்தியுள்ளார். தொடர்ந்து தாமான் விங் ஓன் பகுதியில் உள்ள போக்குவரத்து விளக்குப் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

கார் மோதியதில் காயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரருக்கு இடது கை மற்றும் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் மேலதிக சிகிச்சைக்காக ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 29 வயது சந்தேக நபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், வாகனத்தின் சாலை வரி காலாவதியாகியிருந்ததும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 44(1) கீழ் நடைபெற்று வருகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹம்மது நஜிப் ஹம்சா தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!