
கோலாலம்பூர், செப்டம்பர் 25 – கோலாலம்பூர் முதல் பினாங்கு சென்ற உள்நாட்டு விமானத்தில், பயணி ஒருவரின் பையில் இருந்த 60,000 ரிங்கிட் பணம் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
54 வயதான அந்தப் பயணி, நேற்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் பணம் காணாமல் போனதை கவனித்துள்ளார். அதே விமானத்தில் பயணம் செய்த வெளிநாட்டவர் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விமானப் பயணிகளின் பட்டியல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேக நபரின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் திருட்டு வழக்காக விசாரிக்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்குள் பினாங்கில், விமானத்தில் இடம்பெற்ற இரண்டாவது திருட்டு முயற்சி இதுவாகும். பொதுப் போக்குவரத்து மற்றும் விமானப் பயணங்களின்போது பணம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.



