Latestமலேசியா

1MDB வழக்கு: சிறைத் தண்டனை மற்றும் 11 பில்லியன் ரிங்கிட் அபராதம் ஆகியவற்றை நிறுத்தி வைக்கக் கோரி நஜிப் விண்ணப்பம் கோருகிறார்

கோலாலம்பூர், செப்-25-முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக், 1MDB வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதத்தை அமல்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளார்.

அது தொடர்பில் நஜிப்பின் வழக்கறிஞர் Shafee Abdullah, நீதிபதியின் முன்னிலையில் அந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். 1MDB வழக்கில் மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கவும், 2028 ஆம் ஆண்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை தொடங்கும் வரை அவருக்கு எதிராக சிறைவாச உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

அதற்கு அரசுத் தரப்பு பதிலளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, அவ்விண்ணப்பம் மீதான விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அதற்கு முந்தைய நாளே தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை AmBank கணக்குகளில் செலுத்தப்பட்ட 2.28 பில்லியன் ரிங்கிட் 1MDB நிதியை கையாண்டது தொடர்பாக நஜிப் நான்கு அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் 21 பணமோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும் 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

SRC International வழக்கில் விதிக்கப்பட்ட ஆறாண்டு சிறைத்தண்டனையை நிறைவு செய்த பின், நஜிப்பின் 15 ஆண்டு சிறைத்தண்டனை 2028 ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!