Latestமலேசியா

வணக்கம் மலேசியாவின் ‘வணக்கம் வாய்ஸ் 2026’ பாடல் திறன் தேடல் போட்டி; அடுத்த சுற்றுக்கு Top 25 போட்டியாளர்கள் தேர்வு!

பெட்டாலிங் ஜெயா, செப்- 27 – மலேசியாவின் அடுத்த தமிழ் இசை நட்சத்திரத்தை அடையாளம் கண்டு, புதிய திறமைகளை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடைபெற்று வரும் ‘வணக்கம் வாய்ஸ் 2026’ பாடல் திறன் தேடல் போட்டி தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

வணக்கம் மலேசியாவின் OTT தகவல் பொழுதுபோக்குத் தளமான வணக்கம் மேக்ஸ் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டிக்கு நாடு முழுவதிலுமிருந்து கிடைத்த பதிவுகள் மற்றும் பாடல் காணொளிகள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அடுத்த சுற்றுக்கான Top 25 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வான 25 போட்டியாளர்களுக்கான சிறப்பு விளக்கக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வணக்கம் மலேசியா மற்றும் வணக்கம் மேக்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. தியாகராஜன் முத்துசாமியும் கலந்துகொண்டு, தேர்வான போட்டியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

‘வணக்கம் வாய்ஸ் 2026’-இன் வழிகாட்டியாக (Mentor) செயல்படும் திரு. நாதனும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அடுத்தடுத்த சுற்றுகளுக்கு போட்டியாளர்கள் எவ்வாறு தயாராக வேண்டும், குரல் வளம் மற்றும் பாடல் திறனை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கினார்.

வெறும் சிறந்த குரல்களைத் தேர்ந்தெடுப்பதோடு நின்றுவிடாமல், போட்டியாளர்களின் திறமைகளை மெருகேற்றி, இசைத்துறையில் சிறந்து விளங்கக்கூடிய கலைஞர்களாக அவர்களை உருவாக்குவதற்கான சிறந்த தளமாகவும் ‘வணக்கம் வாய்ஸ் 2026’ அமையும்.

அடுத்தடுத்த சுற்றுகளில் தங்களின் திறமையை நிரூபிக்கும் போட்டியாளர்களில் சிறந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதியில் ‘வணக்கம் வாய்ஸ் 2026’ பிரமாண்ட இறுதிச் சுற்றில் களமிறங்கவுள்ளனர்.

உள்ளூர் தமிழ் இசைத் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு முறையான வழிகாட்டுதலுடன் முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு, முன்னணி தேயிலை நிறுவனமான BOH Malaysia தொடர்ந்து பேராதரவு வழங்கி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!