Latestமலேசியா

சிங்கப்பூரில் மலேசியர் கைது; 1 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கும் அதிக மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சிங்கப்பூர், செப்டம்பர் 28 – சிங்கப்பூரில் ஒரு மலேசியர் உட்பட இருவர், 10 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 37 வயதான மலேசியரும், 41 வயதான சிங்கப்பூரரும் உள்ளடங்குவர்.

கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, மலேசியர் துவாஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளில் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அவரது மோட்டார் சைக்கிளில் பிஸ்கட் எனக் குறிப்பிடப்பட்ட பொட்டலங்களிலிருந்து 6,961 கிராம் ஹெராயின் (heroin), 1,116 கிராம் ஐஸ் (ice) மற்றும் 1,032 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதே நாளில், தம்பினீஸ் ஸ்ட்ரீட் (Tampines Street) 83 பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையில் சிங்கப்பூர் நபரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 790 கிராம் ஹெராயின் (heroin), 602 கிராம் கஞ்சா, 127 கிராம் ஐஸ் (ice), 51 கிராம் எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள், 21 கிராம் கெட்டமைன் மற்றும் 33,086 சிங்கப்பூர் டாலர் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிங்கப்பூரின் போதைப்பொருள் தவறான பயன்பாட்டுச் சட்டத்தின் கீழ், போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வருவது உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்படலாமென குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!