
மெர்சிங், செப்-30-ஜோகூர், Mersing, Taman Ismailலில் உள்ள கடையொன்றில், மோட்டார் சைக்கிளின் எக்ஸாஸ்டிலிருந்து எழுந்த அதிக சத்தம் தனது குழந்தையைத் திடுக்கிடச் செய்ததால் ஆத்திரமடைந்த ஆடவர் ஒருவர், மோட்டார் சைக்கிளோட்டியைத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த மோட்டார் சைக்கிளோட்டி அவ்வாடவரின் வாகனத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எக்ஸாஸ்ட் ஒலி அதிகமாக எழுந்துள்ளது. அதனால் அவ்வாடவரின் மனைவி வைத்திருந்த கைக்குழந்தை விழித்துக் கொண்டு அழத் தொடங்கியதால் ஆத்திரமுற்று அவர் மோட்டார் சைக்கிளோட்டியைத் தாக்கியதாக Mersing மாவட்டக் காவல் துறைத் தலைவர் Abdul Razak Abdullah Sani தெரிவித்தார்.
ஒரு நிமிடம் 45 வினாடிகள் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. தாக்கப்பட்டதில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டிக்கு இடது கன்னம் மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 323-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை மெர்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என Abdul Razak கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.



