
பேராக், செப்டம்பர் 30 – பேராக், பீடோர் சென்ட்ரல் பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் நேற்று மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 41 வயதுடைய ஆடவர் ஒருவரின் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
மாலை 6.08 மணியளவில் டொயோட்டா லேண்ட் குரூசர் (Toyota Land Cruiser) வாகனத்தில் பெட்ரோல் நிரப்ப வந்தபோது, கறுப்பு நிற ஹோண்டா சிட்டி (Honda City) காரில் வந்த இருவர் திடீரென வெளியேறி, அவரது வாகனத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இடது தோளில் காயமடைந்த அந்த ஆடவர் முதலில் தாப்பா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஈப்போவிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கிக் குண்டு ஒன்று, நான்கு வெற்று தோட்டாக்கள் மற்றும் குண்டுத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. சந்தேகநபர்களையும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தையும் கண்டறிய காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



