
சொங்க்லா, நவம்பர்-16,தாய்லாந்தின் Hat Yai-யில், சமூக ஊடகத்திற்காக வீடியோ பதிவுச் செய்யும் நோக்கில், சாலையில் வாகன சாகசங்களில் ஈடுபட்ட 3 மலேசியர்களுக்கு மொத்தம் 12,000 Bhat அதாவது 1,447 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
26 முதல் 30 வயதுக்குட்பட்ட அம்மூவரும், தாய்லாந்து நாட்டவர் ஒருவருடன் இணைந்து நேற்று அதிகாலை 12.30 மணியளவில் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தின் போது, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலான 3 மலேசியப் பதிவு எண்களைக் கொண்ட கார்களும், தாய்லாந்து நாட்டவரின் கருப்பு நிறக் காரும் அணிவகுத்துச் சென்றுள்ளன.
அப்போது, வாகனங்களைப் பலமுறை u-turn செய்ததுடன், இயந்திரங்களை அதிக சத்தத்துடன் இயக்கி, போக்குவரத்துக்கும் அவர்கள் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, நால்வரும் போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட நால்வருக்கும் தலா 4,000 Baht அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் தாய்லாந்தின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென அந்நாட்டுப் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.



