Latestமலேசியா

9 ஆண்டுகளுக்குப் பிறகு செப்பாங்கில் வெர்ஸ்டாப்பன் வெற்றி; மலேசிய GP மீண்டும் நடத்த காலம் தேவை — அன்வார்

செப்பாங், அக்டோபர்-4,9 ஆண்டுகளுக்குப் பிறகு செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்திற்குத் திரும்பிய Formula One கார்ப் பந்தயத்தில், Red Bull அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) அபார வெற்றிப் பெற்றார்.

கனமழை மற்றும் மின்னல் காரணமாக இந்த Bahrain Grand Prix போட்டியின் தொடக்கம் 90 நிமிடங்களுக்கும் மேலாக தாமதமான நிலையில், பின்னர் தொடங்கிய பந்தயம் பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றது.

சவாலான ஈரமான பந்தயத் தளத்தில் ஆதிக்கம் செலுத்திய வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்தார்.

Mercedes அணியின் கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) இரண்டாவது இடத்தையும், Ferrari-யின் நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.

ஒரு கட்டத்தில் 18-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்ட ஹாமில்டன், பந்தயத் தளம் காயத் தொடங்கிய பின்னர் அபாரமாக முன்னேறி podium அதாவது முதல் 3 இடங்களில் ஒன்றைப் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெர்ஸ்டாப்பனைப் பொறுத்தவரை செப்பாங் வெற்றி புதியதல்ல.

2017-ஆம் ஆண்டு மலேசியாவில் கடைசியாக நடைபெற்ற F1 போட்டியிலும் அவரே வெற்றிப் பெற்றிருந்தார்.

இதனிடையே, மலேசிய Grand Prix போட்டியை மீண்டும் கொண்டு வருவது குறித்து Formula One குழுமத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டெஃபானோ டொமெனிகாலியுடன் (Stefano Domenicali) பேச்சு நடத்தியிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மலேசிய Grand Prix-ஸை மீண்டும் நடத்துவதற்கு சில காலம் தேவைப்படும் என்றார் அவர்.

எது எப்படி இருந்தாலும், F1GP பந்தயம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செப்பாங்கிற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், எதிர்காலத்தில் மலேசிய Grand Prix மீண்டும் நடைபெறுவதற்கான சாத்தியத்தை தாம் எதிர்நோக்குவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

செப்பாங்கில் சுமார் 260,000-க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கண்டு களித்த இந்த பஹ்ரேய்ன் F1GP பந்தயத்தைக் காண, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், புருணை சுல்தான், சுல்தான் ஹசானால் போல்கியா, பஹ்ரேய்ன் பட்டத்து இளவரசரும் அந்நாட்டு பிரதமருமான Salman bin Hamad Al-Khalifa உள்ளிட்டோர் சிறப்பு வருகைப் புரிந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!