
கோலாலம்பூர், அக்டோபர்-12,தம்மையோ அரசாங்கத்தையோ விமர்சிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பது குற்றமல்ல என்றும், மாணவர்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்துலக இளம் எதிர்காலத் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசியபோது அன்வார் இதனைக் கூறினார்.
கல்வியின் முக்கிய நோக்கமே விமர்சனச் சிந்தனையை வளர்ப்பதுதான் என அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பேச்சுச் சுதந்திரம், கருத்து வெளிப்பாடு மற்றும் அமைதியான ஒன்றுகூடல் தொடர்பாகப் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
AUKU எனப்படும் 1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இளைஞர்கள் ஊழலை எதிர்த்தும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தும், நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார்.



