
காஜாங், அக்டோபர்-13,சிலாங்கூர், காஜாங்கில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 3 கார்களும் 3 மோட்டார் சைக்கிள்களும் மண்ணில் புதைந்து சேதமடைந்தன.
ஜாலான் நிலாம் 2 பகுதியில், மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பிற்பகல் 3 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இதன் காரணமாக, சுமார் 5 மீட்டர் உயரமுள்ள மண் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 வாகனங்கள் சேதமடைந்தன.
நல்ல வேளையாக, இச்சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோப் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, உலு லங்காட் மாவட்ட மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடம் விரைந்து நிலைமையைக் கண்காணித்தனர்.
காஜாங் நகராண்மைக் கழக அதிகாரிகளும் போலீஸாரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நிலச்சரிவால் எந்தவொரு வீடும் பாதிக்கப்படவில்லை என்பதுடன், தற்காலிக நிவாரண மையமும் திறக்கப்படவில்லை.
சம்பவத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



