
ஜகார்த்தா, அக்டோபர் 20 – இந்தோனேசியாவில் 2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 19 லட்சத்துக்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளதாக Nusantara Atlas அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியா மூன்று விமானங்களையும் 52 பணியாளர்களையும் அனுப்பி உதவவுள்ளதுடன், சிங்கப்பூரும் உதவி வழங்க முன்வந்துள்ளது.
ஜனவரி முதல் செப்டம்பர் வரை 19,16,588 ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியைவிட 38 விழுக்காடு அதிகமாகும். ஜூன் மாதம் முதல் நிலவிய வறட்சியும் வலுவான எல் நினோ வானிலைச் சுழற்சியும் தீ பரவுவதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
புகைமூட்டத்தால் மலேசியா மற்றும் கிழக்குத் திமோர் (Timor-Leste) நாடுகளில் சில பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் வரையிலும் புகை பரவியுள்ளது. மேலும், நூறாயிரக்கணக்கான மக்கள் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தோனேசிய அதிபர், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தப் பெருமளவிலான வளங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், 47 விமானங்களும் 60,000 பணியாளர்களும் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கிழக்கு ஜாவாவிலுள்ள தேசியப் பூங்காவில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தக் குழுவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் காட்டுத் தீக்குக் காரணமான நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், தீயைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் எச்சரித்துள்ளது.



