
பினாங்கு , அக்டோபர் 20- பினாங்கு பெர்மாத்தாங் டாமார் லாவுட் (Permatang Damar Laut) பகுதியில் உரிமமின்றி வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட உணவகம் மற்றும் முடிதிருத்தும் கடை ஆகிய இரு வணிக வளாகங்களுக்கும் பினாங்கு தீவு மாநகராட்சி (MBPP) சீல் வைத்து, வணிக உபகரணங்களையும் பறிமுதல் செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், உணவகத்தில் மூன்று வெளிநாட்டவர்கள் இருந்ததும், முடிதிருத்தும் கடையை வெளிநாட்டவர் ஒருவர் நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், உணவகத்தில் சுகாதாரமற்ற சூழலும் கரப்பான் பூச்சிகளும் காணப்பட்டன.
இதையடுத்து, இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டதுடன், சீல்களை அகற்றவோ சேதப்படுத்தவோ அல்லது தொடர்ந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்த, உரிமமின்றிச் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என பினாங்கு தீவு மாநகராட்சி தெரிவித்துள்ளது.



