சிங்கப்பூரில் பாலியல் சேவை வழங்கிய கும்பல் முறியடிப்பு: 30 பேர் கைது

சிங்கப்பூர், அக்டோபர் 21 – சிங்கப்பூரில் பாலியல் சேவைகளை இணையதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கும்பலை முறியடிக்க, கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கும்பல் 2024ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகவும், சிங்கப்பூர் அதிகாரிகளின் நடவடிக்கைகளைத் தவிர்க்க மலேசியாவைச் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.
மலேசிய தேசியக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் (Datuk M. Kumar) கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் சிங்கப்பூர் காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர். அவர்களில் ஏழு பேர் சீன நாட்டவர்கள், ஒருவர் சிங்கப்பூர் நாட்டவர், மற்றொருவர் மலேசியர்.
மேலும், இணையவழிப் பாலியல் சேவைகளை விளம்பரப்படுத்தி நிர்வகித்ததாகச் சந்தேகிக்கப்படும் 21 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் சீன நாட்டவர்கள், மூவர் வியட்நாமியர்கள், ஒருவர் லாவோஸ் நாட்டவர்.
ஒன்பது பேர் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், மற்ற 21 பேரும் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



