
சிங்கப்பூர், அக்டோபர்-27,சிங்கப்பூருக்கு 700,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறி, 24 வயது மலேசிய இளைஞர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
துவாஸ் சோதனைச் சாவடியில் ஒரு மோட்டார் சைக்கிளை சிங்கப்பூர் அதிகாரிகள் சோதனையிட்டபோது, சந்தேக நபர் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 2 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றில் ஹெரோயின் மற்றும் ஷாபு வகை போதைப்பொருள்களும் அடங்கும்.
அவை, 1,010 போதைப் பித்தர்கள் ஒரு வாரத்திற்குப் பயன்படுத்தும் அளவுக்குப் போதுமானவையாகும்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



