
இஸ்லாமாபாத், அக்டோபர்-30,பாகிஸ்தான், ராவல்பிண்டியில் இயங்கி வந்த சட்டவிரோத இணையவழி மோசடி மையத்தின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 130 மலேசியர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகள் அளித்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், இணையம் வாயிலாக நிதி மோசடி மற்றும் அனைத்துலக அளவில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்த பெரிய கும்பல் பிடிபட்டுள்ளது.
கைதான மலேசியர்களில் பெரும்பாலானோர் அதிக சம்பள வேலை வாய்ப்பு என ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டதாக தொடக்கக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் அங்கிருந்தபடியே இங்குள்ள மலேசியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்; அதாவது இணையத் தொலைப்பேசியில் அழைத்து வங்கி வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, எதிர்முனையில் இருப்பவர்களை அச்சுறுத்துகின்றனர்.
வங்கி பரிவர்த்தனையில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் இருப்பதாகவும், பணத்தை மாற்றாவிட்டால் நீதிமன்றப் படிளில் ஏற வேண்டி வரும் என்றும் மிரட்டுகின்றனர்.
பயந்தவர்கள் Touch ‘n Go eWallet மூலம் அனுப்பும் பணத்தை மோசடிக்காரர்கள் பின்னர் கிரிப்தோ நாணயமாக மாற்றிக் கொள்கின்றனர்.
இக்கும்பலை, கம்போடியாவில் இருந்தபடியே ஒரு மலேசியர் இயக்கி வருவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வரும் பாகிஸ்தான் அதிகாரிகள், அங்குள்ள மலேசிய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் குறித்து பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.



