
பெட்டாலிங் ஜெயா, அக்-30-விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்த கார் ஒன்று, திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கார் உரிமையாளர் இழுவை வாகனத்திற்காகக் காத்திருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவம் குறித்து ‘Threads’ தளத்தில் @Sapheyaa என்ற பயனர் பகிர்ந்திருந்தார். தனது நண்பருக்குச் சொந்தமான அந்தக் கார், கண் இமைக்கும் நேரத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு வேறோர் இடத்தில் போய்ச் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவத்திற்குப் பின் உதவி பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும், காவல் நிலையத்தை அணுகியபோது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். சிவில் பாதுகாப்புப் படையான JPAM அணுகுமாறும் கூறப்பட்டது. இன்று மீண்டும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைத் தொடர்பு கொண்டபோது போதிய பணியாளர்கள் இல்லாததால் உதவ முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில் எந்தத் தரப்பை அணுகுவது என்பது தங்களுக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட தரப்புகளின் பணிவரம்புகள் குறித்துப் புரிந்து கொண்டாலும், உரிய உதவியைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வேளையில், இணையவாசிகள் பலரும் அதன் தொடர்பில் கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். அவசரகால மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கே தீயணைப்புத் துறை முன்னுரிமை அளிப்பதாகவும், இத்தகைய சம்பவங்களில் காப்பீட்டு நிறுவனத்தை அல்லது தனியார் இழுவைச் சேவையை அணுகலாம் என்றும் சிலர் ஆலோசனை வழங்கியிருந்தனர். வாகனத்தை மீட்க கிரேன் அல்லது winch கருவியைப் பயன்படுத்தலாம் என சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.



