
கோலாலம்பூர், அக்டோபர் 30 – கோலாலம்பூரில் உள்ள கம்போங் பாண்டான் சுற்றுவட்டத்தில் கேபிள் திருடப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவிய காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில், போக்குவரத்து விளக்குக்கு அருகே ஒருவர் கேபிளை இழுத்துச் செல்வது காணொளியில் பதிவாகியுள்ளது. பின்னர், அந்த கேபிள் வெட்டப்பட்டதாகவும் காணொளியைப் பதிவிட்ட நபர் தெரிவித்துள்ளார்.
வாங்சா மாஜு மாவட்டக் காவல் துறைத் தலைவர் அன்னாஸ் சுலைமான் (Annas Sulaiman) கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமது தலைமையகமே போலீஸ் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வழக்கு, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



