
பெட்டாலிங் ஜெயா, அக்-30 – 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மீது எரிதிராவகம் எனச் சந்தேகிக்கப்படும் திரவம் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில், வெளிநாட்டவர் ஒருவரைப் பெட்டாலிங் ஜெயா காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உணவகம் ஒன்றில் பணிபுரியும் அப்பெண்ணும் அவரது முன்னாள் காதலர் என நம்பப்படும் வெளிநாட்டவரும் காதல் உறவில் இருந்ததாக நம்பப்படுகிறது. காதல் முறிவு அச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என பெட்டாலிங் ஜெயா மாவட்ட OCPD Shamsudin Mamat தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து போலீசாருக்குப் புகார் கிடைத்துள்ளது. வேண்டுமென்றே கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டத்தின் 325ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கடுமையான தீக்காயங்களுக்கு ஆளான அந்த வெளிநாட்டுப் பெண், தற்போது யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக Shamsudin தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் வகையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன.



