
பெட்டாலிங் ஜெயா, நவ-02-காவல்துறையினரால் துரத்தப்பட்டபோதும், டோல் கட்டணம் செலுத்துவதற்காக வேனை நிறுத்திய ஓட்டுநரின் செயல் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது செயலைப் பாராட்டி பலரும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
காவல்துறையினர் துரத்திச் சென்ற வேன் டோல் சாவடியில் நிறுத்தப்படுவது ‘Threads’ தளத்தில் @Nyzamferiy என்ற பயனர் பகிர்ந்த காணொளியில் பதிவாகியுள்ளது. காவல்துறையினர் வேனின் கதவுகளைத் திறக்க முயன்றபோதும், ஓட்டுநர் டோல் கட்டணம் செலுத்த முயன்றதாக அந்தப் பயனர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காவல்துறையினர் வாகனத்தைச் சூழ்வதற்குள் அவரால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து வேனை வேகமாகச் செலுத்திய ஓட்டுநர், டோல் சாவடியின் தடுப்பை உடைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காட்சிகளும் காணொளியில் உள்ளன.
அச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த சிலர், டோல் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக முன்னால் செல்லும் வாகனத்தை மிக நெருக்கமாகப் பின்தொடரும் ஓட்டுநர்களுடன் ஒப்பிடுகையில், இந்த வேன் ஓட்டுநர் குறைந்தபட்சம் கட்டணம் செலுத்த முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனால், அவரை ‘கண்ணியமான குற்றவாளி’ என்றும் சிலர் நகைச்சுவையாக வர்ணித்துள்ளனர்.
MEX விரைவுச்சாலையில் நீல நிற எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்ற பல காவல் ரோந்து வாகனங்கள் ஒரு வேனைத் துரத்திச் செல்லும் காட்சிகள் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியிருந்தன. அச்சம்பவம் குறித்து இணையப் பயனர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.



