
பூச்சோங், நவம்பர் 2 – பூச்சோங் கம்போங் செரி அமானிலுள்ள (Kampung Seri Aman) கோழி அறுவை மையம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹலால் சான்றிதழின்றி செயல்பட்டு வந்ததுடன், இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாக்கிம் (JAKIM) பலமுறை எச்சரித்தும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளது.
அந்த மையம் தினமும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு 40,000க்கும் மேற்பட்ட கோழிகளை விநியோகித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் அமானின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிப் பிரிவின் துணை இயக்குநர் டத்தோ முஹமட் அப்துல் ஹலிம் (Muhammad Abdul Halim) கூறுகையில், மையத்திடம் ஹலால் சான்றிதழோ அங்கீகரிக்கப்பட்ட ஹலால் அந்தஸ்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும், கைது செய்யப்பட்ட வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 12 தொழிலாளர்களிடமும் விலங்குகளை அறுப்பதற்கான தகுதிச் சான்றிதழ்கள் இல்லை. அவர்கள் அனைவரும் சட்டவிரோதக் குடியேறிகள் எனவும், நவம்பர் 1 முதல் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்கள் அனைவரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.



