Latestமலேசியா

UTeM-இல் பார்வையாளர் மீது நுழைவு வளைவு சரிந்து விழுந்த சம்பவம்: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது

ஆயர் குரோ, நவ-04-மலாக்கா மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான UTeMமின் 22ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, நுழைவு வளைவு சரிந்து விழுந்து ஒருவர் காயமடைந்த சம்பவம் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அச்சம்பவம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலுடன் அவ்விவகாரம் முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளதாக UTeM மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகார அலுவலகம் (HEPA) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும், பட்டமளிப்பு விழாவை நிர்வகித்த நிறுவனத்திற்கும் இடையே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையான ஆவணங்களுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. மேலும், UTeM பல்கலைக்கழகமும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி உள்ளிட்ட சமூக நல ஆதரவுகளை வழங்கியுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் தனியுரிமையை மதித்து, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு தளத்திலும் அவ்விவகாரம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதையோ விவாதிப்பதையோ தவிர்க்குமாறு HEPA அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!