Latestமலேசியா

KP2027 புதிய பாடத்திட்டத்தில் தமிழ்மொழிக்கு வாரத்திற்கு 12 போதனை நேரங்கள் தொடரும்-கல்வி அமைச்சு

கோலாலம்பூர், நவம்பர்-6,2027-ஆம் ஆண்டு புதிய பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ், தமிழ்மொழிப் பாடத்திற்கான வாராந்திர கற்பித்தல் நேரம் 12 வகுப்புகளாகத் தொடர்ந்து நீடிக்கும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய மாதிரி தமிழ்ப் பள்ளிகளில் தமிழ்மொழிக்கான கற்பித்தல் நேரத்தைக் குறைக்கும் திட்டம் தொடர்பாக எழுந்த கவலைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசியப் பள்ளிகளில் மலாய் மொழிக்கும், தேசிய மாதிரி சீனப் பள்ளிகளில் சீன மொழிக்கும் வாரத்திற்கு 12 போதனை நேரங்கள் தொடர்ந்து ஒதுக்கப்படும் என்றும் அமைச்சு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

புதியப் பாடத்திட்டத்தின் கீழ் மொழிப்பாடங்களுக்கான கற்பித்தல் நேர ஒதுக்கீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக KPM கூறிற்று.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் தொடர்பாக, கல்வி துணையமைச்சர் வோங் கா வோவை (Wong Kah Woh)12 தமிழ்க்கல்வி சார்ந்த அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது, புதியப் பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களுக்கான நேர ஒதுக்கீடு குறித்து துணையமைச்சர் விளக்கமளித்ததாகவும், தமிழ்க்கல்வி அமைப்புகளின் கருத்துகளையும் கவலைகளையும் கேட்டறிந்ததாகவும், அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேலன் மஹாலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்த, கல்வி அமைச்சுக்கும் தமிழ்க்கல்வி அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பும் தொடர் கலந்துரையாடலும் அவசியம் என அந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் அச்சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!