
சிரம்பான், நவம்பர்-6,சிரம்பானில், முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது உறவினர்கள் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
60 வயது மதிக்கக்தக்க அவ்வாடவர், பலரால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று டிக் டோக் சமூக வலைத்தளத்தில் பரவியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து, 28 முதல் 34 வயதுக்குட்பட்ட ஓர் ஆடவர் மற்றும் இரு பெண்களை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
கைதான மூவரும் உயிரிழந்த முதியவரின் உறவினர்கள் என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Alzafny Ahmad தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரப்பர் குழாய், சக்கர நாற்காலி, கைப்பேசி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யூகங்களைத் தவிர்க்குமாறும் பொது மக்களைப் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



