
புத்ராஜெயா- நவ-5, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) மூலோபாயத் தொடர்புப் பிரிவைச் (BKS) சேர்ந்த ஆறு அதிகாரிகள், மலேசிய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IPRM) மக்கள் தொடர்பு அங்கீகாரத்தை (APR) பெற்றனர்.
BKS இயக்குநர் ஹிஸ்யாம் முகமது யூசோஃப் தலைமையிலான குழுவில், துணை இயக்குநர் பத்ரிலா ஜம்லுஸ், மல்டிமீடியா பிரிவு தலைவர் அஸ்ராய் முகமது, முகமது ஹெல்மி ஃபைஸ் அலி, ராமா மகேஸ்வரன், கணேஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆய்வுக் கட்டுரை அல்லது வழக்காய்வைச் சமர்ப்பித்தல், நேர்காணல் உள்ளிட்ட அங்கீகாரத் தேவைகளை அவர்கள் நிறைவு செய்தனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தகவல் துறை தலைமை இயக்குநர் எர்வின் கைருல் அகமது, செயற்கை நுண்ணறிவு காலத்திலும் தொடர்புத் துறைக்கு மனிதர்களின் பங்களிப்பு அவசியம் என்றார். AI விரைவாக உள்ளடக்கங்களை உருவாக்கினாலும், தொழில்முறைத் தகவல் தொடர்புக்குத் தேவையான பச்சாதாபமும் நேர்மையும் அதற்கு இல்லை எனக் குறிப்பிட்டார்.
IPRM தலைவர் ஜஃப்ரி அமின் ஒஸ்மான், இந்த ஆண்டு 37 விண்ணப்பங்களில் 34 பேர் இறுதித் தேர்வில் வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார். மேலும், APR பெற்றவர்கள் இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசியான் நாடுகளில் பயிற்சி அல்லது வழிகாட்டுதல் வழங்கும் வாய்ப்பைப் பெறுவர் என்றும் கூறினார்.
இந்த அங்கீகாரம் SPRM-க்கும் மக்கள் தொடர்புத் துறைக்கும் தொடர்ந்து பங்களிக்க ஊக்கமளிக்கும் என ஹிஸ்யாம் தெரிவித்தார்.



