
கோலாலம்பூர், நவம்பர் 5 – செலாயாங் (Selayang) பகுதியில் பரபரப்பான சாலையின் நடுவில் உரிமையாளரின் கண்காணிப்பின்றி கேப்பிபாரா (Capybara) விலங்கு ஒன்று சுற்றித்திரிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலங்கு சாலையின் நடுப்பகுதியில் நின்றுகொண்டிருக்க, வாகனங்கள் அதைக் கடந்து சென்ற காட்சியை Threads பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் அந்த விலங்கை உரிய கண்காணிப்பின்றி சாலையில் நடமாட விட்ட அதன் உரிமையாளருக்குப் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
குறிப்பாக, வாகனம் மோதியோ அல்லது நாய் தாக்கியோ அந்த விலங்கு பாதிக்கப்படலாம் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், கழுத்தில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருந்தும் உரிமையாளர் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்தப் பதிவு இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.



