
ஷா ஆலாம், நவ-06-வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நீண்டகாலத் தணிப்புத் திட்டங்களையும் உடனடி நடவடிக்கைகளையும் சிலாங்கூர் மாநில அரசு தீவிரப்படுத்தி வருவதாக மந்திரி பெசார் Datuk Sri Amirudin Shari தெரிவித்திருக்கிறார். இருப்பினும், குறிப்பாகத் தீவிரமடைந்து வரும் வானிலைச் சூழலில், வெள்ளப் பிரச்சினையை ஒரே இரவில் முழுமையாகத் தீர்த்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அண்மைய வெள்ளத்திற்கு வழக்கத்திற்கு மாறான மிக அதிக அளவிலான மழையே காரணம் என்று குறிப்பிட்ட Amirudin, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு உடனடி உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
நேற்று பெய்த கனமழையால் Puncak Alam, UiTM பகுதி, Alam Suria, Saujana Utama, Sungai Buloh ஆலாம் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, ஷா ஆலாம், கிள்ளான், கோலா சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் ஒன்பது தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டு, அவற்றில் 284 குடும்பங்களைச் சேர்ந்த 1,120 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நிர்வாகத்தை ஒருங்கிணைக்கவும், பல்வேறு தரப்பினரின் நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தவும் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஊராட்சி அமைப்புகளை உள்ளடக்கிய சிறப்புப் பணிக்குழு 2024-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக Amirudin கூறினார்.
தற்போது 4.28 பில்லியன் ரிங்கிட் செலவில் 105 நீண்டகால வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்படுகின்றன. அதேவேளை, திடீர் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் 70 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 255 உடனடி வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றில் சுமார் 70 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் இவ்வாண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் இணைந்து ஐந்து அம்சங்களைக் கொண்ட வெள்ள நிர்வாகத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் Amirudin தெரிவித்தார்.



