Latestமலேசியா

ஜிஎஸ்டி நிராகரிப்பு அரசியல் நோக்கத்திலானது அல்ல: அன்வார்

கோலாலம்பூர், நவ 12-பொருள் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் அமல்படுத்தும் திட்டத்தை நிராகரித்ததற்குப் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை. பொதுமக்கள் மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டே அம்முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

GST, தேசியப் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் உண்மையிலேயே பயனளிக்குமானால், அரசியல் காரணங்களுக்காக அதனை நிராகரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தின்போது, Beluran நாடாளுமன்ற உறுப்பினர் Ronald Kiandeeயின் துணைக் கேள்விக்குப் பதிலளித்த அன்வார், தற்போதைய சூழலில் GSTயை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தாம் உறுதியாக எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், உலகின் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள GST, அந்நாட்டு மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா என்றும் அவர் Ronaldடிடம் கேள்வி எழுப்பினார். பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடிய வரி முறையை அறிமுகப்படுத்துவதில் தமக்கு எப்போதுமே உடன்பாடில்லை என அன்வார் தெரிவித்தார்.

இதனிடையே, விற்பனை மற்றும் சேவை வரி (SST) மூலம் தற்போது கிடைக்கும் வருவாய், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.2 விழுக்காடாக இருக்கிறது. இது 2017ஆம் ஆண்டில் GST மூலம் கிடைத்த வருவாய்க்குச் சமமானதாகும் என்றும், எனவே தேசிய வருவாயை அதிகரிப்பதற்காக GSTயை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிரதமர் விளக்கினார்.

மேலும், SST பெரும்பாலும் வணிகங்கள் மீது, குறிப்பாக இறக்குமதி நிலையில் விதிக்கப்படுகிறது. SSTயின் ஒரு பகுதி மட்டுமே இறுதியில் பயனீட்டாளர்களுக்கும் விதிக்கப்படுகிறது. ஆனால் GSTயோ பயனீட்டாளர்களையும் நேரடியாகப் பாதிக்கும் வகையில் பரந்த அளவில் அமல்படுத்தப்படுகிறது என அன்வார் தெளிவுபடுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!