
கோலாலம்பூர், நவம்பர் 13 – 2027ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜோர்டானைச் சேர்ந்த ராயல் இஸ்லாமிய மூலோபாய ஆய்வு மையம் (RISSC) வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கான அன்வாரின் முயற்சிகள் பாராட்டப்பட்டுள்ளன.
மேலும், தாய்லாந்து – கம்போடியா இடையிலான எல்லைப் பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளுக்குமிடையே போர் நிறுத்தம் ஏற்பட உதவிய அவரது தூதரக முயற்சிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், காஸாவில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளை வலியுறுத்தியும் அன்வார் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் இந்த அங்கீகாரத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தப் பட்டியலில் சவூதி அரேபிய மன்னர் சல்மான் (King Salman bin Abdul-Aziz Al-Saud), பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மான் (Mohammed bin Salman), பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Mian Muhammad Shehbaz Sharif), அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீர் (Syed Asim Munir) மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) ஆகியோர் கூட்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) 16ஆவது இடத்தில் உள்ளார்.



